வாஷிங்டன், அக்.12: வரும் 2012ம் ஆண்டில் உலகம் அழிந்துவிடும் என்று பரபரப்பாக செய்திகள் வந்து ஓய்ந்துள்ளன. ஆனால், உலகம் அழிய 370 கோடி ஆண்டுகள் ஆகும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழக இயற்பியல் துறை விஞ்ஞானி ரபேல் பவுசோ தலைமையிலான குழுவினர், பிரபஞ்சம் குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கூறியுள்ளதாவது:
அண்ட வெளியில் நீர்க்குமிழி போன்ற சில ரசாயன குமிழிகள் உருவாகி உள்ளன. அவை வடிவில் பெரிதாகிக் கொண்டே போகின்றன. பல குமிழிகள் உடைந்து மறைந்து விடுகின்றன. அவற்றில் ஏராளமான குமிழிகள் நாளுக்கு நாள் பெரிதாகி வருகின்றன. நீர் கொதிக்கும்போது ஏற்படும் குமிழிகள் போல் அவை உள்ளன.
இதுபோன்ற குமிழிகள் எண்ணிக்கையில் அடங்காத அளவுக்கு பெரிதாகும் போது அண்டவெளி உட்பட எல்லாமே அழியும். அதற்கு 370 கோடி ஆண்டுகள் ஆகும். இவ்வாறு ரபேல் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வை ஆஸ்திரேலிய பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கிண்டலடித்துள்ளனர்.
‘‘அமெரிக்க ஆய்வுக் குழு ஏதோ புள்ளியியல் விவரங்களை வெளியிட்டுள்ளது. பிரபஞ்சம் பற்றிய அவர்களுடைய கணக்கில் உள்ள பிரச்னைகளுக்கு முடிவே கிடைக்காது. அதனால், பிரபஞ்சம் உண்மையில் அழியும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்’’ என்று கிண்டல் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment