Tuesday, November 30, 2010

ஒய்-ஃபை கதிர்களால் மனிதர்களுக்கு ஆபத்து!

ஒய்-ஃபை ( Wi - Fi : கம்பியில்லாத் தொடர்பு ) கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நெதர்லாந்தின் வெனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர்.


அப்போது ஒய்-ஃபை(Wi - Fi) கதிர்களுக்கு அண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் மூலம் வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில நேரங்களில் மனிதனையும் பாதிக்கும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



இது தொடர்பான ஆய்வு தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ளது எனவும் இதனை சரியாக உறுதிப்படுத்த சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இக்கதிர்கள் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, மொபைல் போன்களின் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்கள் கூட தாவரங்களைப் பாதிக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை எனவும் தெரிவித்துள்ளனர்.

விண்வெளியை சுத்தம் செய்ய 9,000 கோடி

பூமியைச் சுற்றியுள்ள விண்வெளி பகுதியை சுத்தம் செய்ய ரஷ்யா ஸி9,000 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது. பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக, உலக நாடுகள் அவ்வப்போது செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகின்றன. இவை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு செயலிழந்து விடுகின்றன. இன்னும் சில செயற்கைக் கோள்கள் தோல்வியடைகின்றன. இதனால் ஏற்படும் கழிவுப் பொருட்கள் வானத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக, உடைந்த செயற்கைக் கோள்களின் பாகங்களை அகற்றுவதற்காக ரஷ்ய விண்வெளி கழகம் (எனர்ஜியா) திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஸி9 ஆயிரம் கோடி செலவில் ஒரு அணுசக்தியில் இயங்கும் ஒரு செயற்கைக் கோள் விண்வெளிக்கு அனுப்பப்படும். இது மிதக்கும் கழிவுகளை பூமியை நோக்கி தள்ளிவிடும். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சுமார் 600 செயற்கைக் கோள்களின் உடைந்த பாகங்கள் விண்வெளியிலிருந்து அகற்றப்படும் என எனர்ஜியா தெரிவித்துள்ளது. எனினும் இந்த செயற்கைக்கோள் 2020ல் தான் தயாராகும்.